சம்பா அறுவடை பணி தீவிரம்


சம்பா அறுவடை பணி தீவிரம்
x

மயிலாடுதுறை பகுதியில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடும் பனிப்பொழிவு நிலவுவதால் 20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பகுதியில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடும் பனிப்பொழிவு நிலவுவதால் 20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பா, தாளடி சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகா பகுதிகளில் பம்புசெட் தண்ணீரை கொண்டு அதிக அளவில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு முன்னதாக மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் பம்புசெட் நீர் மற்றும் காவிரிநீரை கொண்டு அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

அதேபோல சம்பா, தாளடி சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைத்தாலும், பருவமழை முறையாக பெய்ததாலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது.

அறுவடை பணி தீவரம்

இந்த ஆண்டு வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்ததால் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனாலும் ஓரளவு பாதிப்புகள் குறைவாக காணப்பட்ட மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மாப்படுகை, திருவிழந்தூர், நீடூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 3 நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து மாப்படுகை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது பெரும் சிரமமாக இருந்து வருகிறது. அறுவடை பணிகள் அனைத்தும் எந்திரத்தைகொண்டுதான் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை மழை பெய்ததால் வயல்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்து வருகிறது.

எந்திர தட்டுப்பாடு

கடந்த ஒருவாரமாக வெயில் சுட்டெரிப்பதால் அறுவடைக்கு தயாரான வயல்கள் காய தொடங்கியுள்ளன. அதனால் டயர் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியவில்லை. பெல்ட் எந்திரத்தை கொண்டுதான் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான வாடகை மணிக்கு ரூ.2 ஆயிரத்து 450 என்று மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.

எந்திர தட்டுப்பாடு ஏற்படுவதால் சிலர் கூடுதல் வாடகை கேட்கின்றனர். வேளாண்மை பொறியியல் துறையில் குறைந்த வாடகைக்கு கொடுத்தாலும், தேவையான அளவிற்கு எந்திரங்கள் இல்லாததால் தனியார் எந்திரங்களைத்தான் விவசாயிகள் நாடவேண்டியுள்ளது.

20 சதவீத ஈரப்பதம்

கடும் பனிப்பொழிவு நிலவுவதால் நெல்லின் ஈரப்பதமும் அதிகமாக இருந்து வருகிறது. கொள்முதல் நிலையங்களில் குறுவை சாகுபடியின் போது இறுதிகட்டத்தில் கொள்முதல் செய்ததுபோல் 20 சதவீத ஈரப்பதம் வரை உள்ள நெல்லையும் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story