பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரம்


பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரம்
x

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனையானது. விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

விற்பனை மும்முரம்

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக திகழ்வது பொங்கல் திருநாளாகும். இதனையடுத்து பொங்கல் பண்டிகையன்று பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்வதை இன்றளவும் காண முடிகிறது. இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் நேற்று கரூர் உழவர் சந்தை, காமராஜ் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கலுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மஞ்சள் கொத்து விற்பனை மும்முரமாக நடந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர்.

காய்கறி-பழங்கள் விலை நிலவரம்

கரூர் காமராஜ் மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகள் விலை நிலவரம் ஒரு கிலோவில் பின்வருமாறு:- கத்தரிக்காய் ரூ.35, தக்காளி ரூ.26, பாகற்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.40, புடலங்காய் ரூ.30, இஞ்சி ரூ.60, பீன்ஸ் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ. 70, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.40, அவரை ரூ.70, மொச்சை ரூ.90, முள்ளங்கி ரூ.20, கேரட் ரூ.40, சவ்சவ் ரூ.20, வெண்டைக்காய் ரூ.20-க்கு விற்பனையானது. மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.

இதேபோன்று ஆப்பிள் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும், ஆரஞ்சு ரூ. 100-க்கும், மாதுளை ரூ.180-க்கும், திராட்சை ரூ.100-க்கும் விற்பனையானது. காய்கறிகளின் விலை கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் விலை சற்று குறைவாக உள்ளது. மொச்சை, அவரை உள்ளிட்ட காய்கறிகள் விலை மட்டும் உயர்ந்துள்ளது. பழங்களின் விலையும் கடந்த ஆண்டைபோல் அதே விலையில் உள்ளது என்று வியாபாரிகள் கூறினர்.

கரும்பு விலை குறைவு

கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவகர் பஜார், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானைகள் ரகத்திற்கு ஏற்றவாறு ரூ.100 முதல் ரூ.200, ரூ.300 உள்ளிட்ட விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரூர் வெங்கமேடு மேம்பாலம், நகராட்சி அலுவலகம், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஜோடி கரும்பு உயரம் மற்றும் தடிமன் ஆகியவற்றுக்கு ஏற்ப ரூ.40, ரூ.60, ரூ.80 வரை விற்பனையானது. இதேபோல் கடந்த ஆண்டு கரும்பு ஜோடி ரூ.100, ரூ.150 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் கரும்பின் விலை இந்தாண்டு குறைந்துள்ளது.

மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை

கரூர் மாவட்டத்தில், மாயனூர் வாங்கல், நெரூர் சோமுர், வேலாயுதம்பாளையம், சக்கரகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களை பறித்து கரூர் ெரயில் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் ஏலம் விடப்படுகிறது. இந்த பூக்களை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பூ வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். அதன்படி நேற்று ஏலம்போன பூக்களின் விலை கிலோவில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ-ரூ.4 ஆயிரம், முல்லை-ரூ.3 ஆயிரம், அரளி ரூ.400, சம்பங்கி ரூ.200, ரோஜா ரூ.200, செவ்வந்தி ரூ.200, துளசி கட்டு ஒன்று ரூ.20, தாமரைப்பூ ஒன்று ரூ.20-விற்பனையானது. பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் பலர் ஆர்வத்துடன் வந்து பூக்களை ஏலத்தில் எடுத்துச் சென்றதை காண முடிந்தது.

இதேபோல் நொய்யலில் கடந்த வாரம் குண்டு மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1300-க்கு விற்றது தற்போது ரூ.5 ஆயிரத்திற்கும், முல்லை ரூ.1000-க்கு விற்றது ரூ.4 ஆயிரத்திற்கும், காக்கட்டான் ரூ.400-க்கு விற்றது ரூ.1,800-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கு விற்றது ரூ.1,700-க்கும், சம்பங்கி ரூ.70-க்கு விற்றது ரூ.160-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கு விற்றது ரூ.200-க்கும், அரளி ரூ.250-க்கு விற்றது ரூ.450-க்கும், ரோஜா ரூ.150-க்கு விற்றது ரூ.400-க்கும் விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கருத்து

கரூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்களின் விற்பனை குறித்து பொதுமக்கள், இல்லத்தரசிகள், வியாபாரிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

கரூர் பூ மார்க்கெட்டிற்கு வந்த வெங்கமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து:-

கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் தங்களது சக்திக்கு தகுந்தவாறு பூக்களை வாங்கி செல்கின்றனர். தற்போது பனிக்காலம் என்பதால் பூக்கள் செடியிலேயே உதிர்ந்து விடுவதால் பூக்களின் வரத்து சற்று குறைவாக உள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம்.

கரும்புகள் விற்பனையாகவில்லை

குளித்தலையில் கரும்பு விற்பனை செய்யும் வியாபாரி சரவணன்:- குளித்தலையில் கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு விற்பனை தொழிலில் ஈடுபட்டு உள்ளேன். கரும்புகள் கல்லணை பகுதியில் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறேன். இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் செய்யும் இடத்திலேயே விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் பிறரிடம் கடன் பெற்று விற்பனைக்காக கரும்புகளை கொண்டு வந்து வைத்துள்ளேன். இந்தநிலையில் கரும்பின் விலையை கேட்டு செல்கிறார்களே தவிர பொதுமக்கள் தற்போது வரை கரும்பு வாங்கவே வரவில்லை. ஒரு சிலரே கரும்புகளை வாங்கி செல்கிறார்கள்.

கரும்பின் உயரத்தின் அளவைப் பொறுத்து அதன் விலை இருக்கும். கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையின்போது வாடிக்கையாளர்களுக்கு கரும்பை விற்பனை செய்ய முடியாத அளவுக்கு கடைக்கு கும்பல் வரும். அதுபோல பொங்கல் சீர் கொடுப்பதற்காக கரும்புகளை கட்டு கட்டாக வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்தாண்டு அது போன்ற நபர்கள் கூட கரும்புகளை தற்போது வாங்கவில்லை. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை என்கின்ற நிலையில் கரும்புகள் விற்பனையாகாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரே நாளில் எத்தனை பேர்களுக்கு கரும்புகளை விற்பனை செய்துவிட முடியும்.

வாைழப்பழம் விலை உயர்வு

லாலாபேட்டை பகுதியை சேர்ந்த இல்லத்தரசி சித்ரா:-

சாதாரண நாட்களில் வாழைப்பழங்களின் விலை குறைவாகவும், பண்டிகை நாட்களில் விலை உயர்வாக இருக்கும். தற்போது பொங்கலுக்கு சாமி கும்பிட முக்கிய பொருளாக வாழைப்பழம் தேவைப்படுகிறது. அதனால் லாலாபேட்டையில் வாழைப்பழங்கள் விலை அதிகமாக காணப்படுகிறது. கடந்த மாதம் வரை பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையானது. தற்போது பொங்கல் என்பதால் வாழைத்தார் ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனைக்கிறது. வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது.

பச்சரிசி தேவை அதிகரிப்பு

தோகைமலை அருகே கீழவெளியூரை சேர்ந்த மளிகைக்கடை வியாபாரி பால்ராஜ்:-

பொங்கல் பண்டிகைக்கு முக்கியம் பச்சரிசியும், வெல்லமும் தான். தோகைமலை பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் தற்போது பச்சரிசி மற்றும் வெல்லம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பச்சரிசி ஒரு கிலோ ரூ.38-க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு பச்சரிசி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு வெல்லம் 1 கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. தற்போது கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது.

வெல்லம் வாங்குவது கட்டாயம்

நொய்யல் அருகே முத்தனூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி சுதா:-

பொங்கல் வைக்கும்போது வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் வைப்பார்கள். சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு அச்சு மற்றும் உருண்டை வெல்லம் அதிகமாக தேவைப்படுகிறது. கடந்த மாதம் 30 கிலோ கொண்ட அச்சு மற்றும் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,100-க்கு விற்றது, தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 30 கிலோ கொண்ட அச்சு மற்றும் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,370-க்கு விற்பனையாகிறது. வெல்லம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் அச்சு மற்றும் உருண்டை வெல்லம் வாங்க வேண்டிய கட்டாயம் ஆகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story