மழைக்கால மின்விபத்தை தவிர்க்க பாதுகாப்பு வழிமுறைகள்


மழைக்கால மின்விபத்தை தவிர்க்க பாதுகாப்பு வழிமுறைகள்
x

மழைக்கால மின் விபத்தை தவிர்க்க பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.

விருதுநகர்


மழைக்கால மின் விபத்தை தவிர்க்க பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா கூறினார்.

சேவை மையம்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வேண்டுகிறோம்.

மின் கம்பத்தில் அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின்கம்பங்கள் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. அறுந்து விழுந்த மின்கம்பி அருகே செல்லக்கூடாது. மின்கம்பி அறுந்து கிடந்தால் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரம் தொடர்பான அவசர தேவைகள் குறித்து 24 மணி நேரமும் இயங்கும் மின்நுகர்வோர் சேவை மையம் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மின்சாதனங்கள்

மின்னல் ஏற்படும் போது வெட்டவெளியில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள், மின்கம்பிகள் அருகிலோ தஞ்சம் அடையக்கூடாது. பாதுகாப்பான கான்கிரீட் கட்டிடங்களில் மட்டுமே தஞ்சம் அடைய வேண்டும். மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்லக் கூடாது. பொதுமக்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மின் கசிவுகளை கண்டறிந்து உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி விட வேண்டும். மின்கம்பத்தில் கொடி கட்டி துணி காய போடக்கூடாது. டிப்பர் லாரி மற்றும் கனரக வாகனங்களை உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளின் அருகில் நிறுத்தி வைக்கக்கூடாது. கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள். மின் மாற்றியிலோ அல்லது மின் கம்பங்களிலோ எக்காரணம் கொண்டும் மின்வாரிய பணியாளர் தவிர வேறு யாரும் ஏறக்கூடாது.

மின்வேலி

மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை கட்டும்போதும், அலங்கார பந்தல் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் போதும் போதுமான இடைவெளி விடுவதை உறுதி செய்ய வேண்டும். மின்வாரியத்தில் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தை அணுகவும்.

திருவிழாக்கள் மற்றும் கோவில் கொடை நிகழ்ச்சிகளில் தேர்ப்பவனியின் போது எக்காரணம் கொண்டும் மின்சார கம்பிகளை கம்பியினாலோ மற்றும் இதர பொருட்களினாலோ தூக்குவதை கைவிட வேண்டும். விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story