10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி, பென்ஷன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணப்பலத்துடன் கூடிய 3 கட்ட பதவி உயர்வு 12, 24, 36 வருட பணிக்கு வழங்க வேண்டும், 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக்கொடை ரூ.5 லட்சம், குரூப் இன்ஸ்சூரன்ஸ் ரூ.5 லட்சம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும், கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டர் வழங்கி பிராட்பிராண்ட் நெட்வொர்ட் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் புதுச்சேரி கோட்டத்திற்குட்பட்ட திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தபால் பட்டுவாடா பாதிப்பு
இவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் பதிவு தபால், விரைவு தபால் பட்டுவாடா செய்யும் பணிகள் மற்றும் சேமிப்பு கணக்கு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. மேலும் மேற்கண்ட சங்கங்களை சேர்ந்தவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க செயலாளர் பூபாலன், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க செயலாளர் ராஜகோபால் ஆகியோர் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் நடராஜன், வெற்றிவேல், பாலசுப்பிரமணியன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.