ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: அரியலூர் மாவட்டத்தில் 79.28 சதவீதம் வாக்குப்பதிவு


ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 79.28 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அரியலூர்

இடைத்தேர்தல்

அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திருமானூர் ஒன்றியம், கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு, செந்துறை ஒன்றியம், நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு, துளார் ஊராட்சி 6-வது வார்டு, ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு ஆகிய பதவியிடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

அரியலூர் ஒன்றியம், ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியம், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிட்டனர். இதனால் அந்த பகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.

நீண்ட வரிசையில் நின்று...

வாக்குச்சாவடி மையங்களில் சரியாக நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்கு பெட்டிகளின் சீல்களை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடைத்து, வாக்கு பெட்டியை திறந்து காண்பித்தனர். பின்னர் அந்த வாக்குப்பெட்டியை சீல் வைத்து, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலால் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளருக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளரின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர். வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆர்வத்துடன் வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து விட்டு சென்றனர்.

நடுவிரலில் அழியாத மை

வாக்காளர்கள் வாக்களிக்க விதமாக கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு சிவப்பு நிறத்தில் வாக்குச்சீட்டும், வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டன. அதனை வாங்கிய வாக்காளர்கள் அந்த வாக்குச்சீட்டில் தங்களுக்கு பிடித்தமான சின்னங்களில் முத்திரையை குத்தி, வாக்கு பெட்டியில் மடித்து போட்டு தங்களது வாக்கினை பதிவை உறுதி செய்தனர். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். முன்னதாக வாக்களித்தற்காக அடையாளமாக வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் அழியாத மை இடப்பட்டது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் நடந்த முடிந்த இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவில் ரெட்டிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் 3,058 வாக்காளர்களில், 1,252 ஆண் வாக்காளர்களும், 1,246 பெண் வாக்காளர்களும் என 2,498 பேர் வாக்களித்தளித்தால், மொத்தம் 81.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டில் 285 வாக்காளர்களில், 101 ஆண் வாக்காளர்களும், 105 பெண் வாக்காளர்களும் என 206 பேர் வாக்களித்தால், மொத்தம் 72.28 சதவீதம் வாக்குகள் பதிவானது.

79.28 சதவீதம் வாக்குப்பதிவு

இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டில் 426 வாக்காளர்களில், 149 ஆண் வாக்காளர்களும், 187 பெண் வாக்காளர்களும் என 336 பேர் வாக்களித்ததால், மொத்தம் 78.87 சதவீதம் வாக்குகள் பதிவானது. சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டில் 402 வாக்காளர்களில், 127 ஆண் வாக்காளர்களும், 159 பெண் வாக்காளர்களும் என 286 பேர் வாக்களித்ததால், மொத்தம் 71.14 சதவீதம் வாக்குகள் பதிவானது. சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டில் 419 வாக்காளர்களில், 138 ஆண் வாக்காளர்களும், 175 பெண் வாக்காளர்களும் என 313 பேர் வாக்களித்ததால், மொத்தம் 74.70 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டில் 241 வாக்காளர்களில், 91 ஆண் வாக்காளர்களும், 100 பெண் வாக்காளர்களும் என 191 பேர் வாக்களித்ததால் 79.28 சதவீதம் வாக்குகள் பதிவானது. அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 5 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தோ்தலில் மொத்தம் 4,831 வாக்காளர்களில், 1,858 ஆண் வாக்காளர்களும், 1.972 பெண் வாக்காளர்களும் என 3,830 பேர் வாக்களித்ததால், மொத்தம் 79.28 சதவீதம் வாக்குகள் பதிவானது.


Next Story