ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: பெரம்பலூர் மாவட்டத்தில் 71.44 சதவீதம் வாக்குப்பதிவு


ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் 71.44 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பெரம்பலூர்

இடைத்தேர்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், வேப்பூர் ஒன்றியம், கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு, ஆலத்தூர் ஒன்றியம், இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு ஆகிய பதவியிடங்களுக்கு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

ஆனால் பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், ஆலத்தூர் ஒன்றியம், பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பந்தட்டை ஒன்றியம், வி.களத்தூர் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா 2 பேரும் போட்டியிட்டனர். இதனால் அந்த பகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

நீண்ட வரிசையில் நின்று...

வாக்குச்சாவடி மையங்களுக்கு ஆர்வத்துடன் வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து விட்டு சென்றனர். வாக்காளர்கள் வாக்களிக்க விதமாக கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு சிவப்பு நிறத்தில் வாக்குச்சீட்டும், வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டன. அதனை வாங்கிய வாக்காளர்கள் அந்த வாக்குச்சீட்டில் தங்களுக்கு பிடித்தமான சின்னங்களில் முத்திரையை குத்தி, வாக்கு பெட்டியில் மடித்து போட்டு தங்களது வாக்கினை பதிவை உறுதி செய்தனர். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். முன்னதாக வாக்களித்தற்காக அடையாளமாக வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் அழியாத மை இடப்பட்டது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை விறு, விறுப்பாக நடைபெற்றது.

வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு

பின்னர் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு செய்த வாக்கு பெட்டிகள் வாக்குச்சாவடி அலுவலர்கள் வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பின்னர் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு, அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.

71.44 சதவீதம் வாக்குப்பதிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் 4,916 வாக்காளர்களில் 1,604 ஆண் வாக்காளர்கள், 1,908 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3,512 பேர் வாக்களித்ததால், மொத்தம் 71.87 சதவீதம் வாக்குகள் பதிவானது. பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 217 வாக்காளர்களில், 75 ஆண் வாக்காளர்களும், 108 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 183 பேர் வாக்களித்ததால், மொத்தம் 84.322 சதவீதம் வாக்குகள் பதிவானது. வி.களத்தூர் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 372 வாக்காளர்களில், 86 ஆண் வாக்காளர்கள், 152 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 238 பேர் வாக்களித்தளித்தால், மொத்தம் 63.978 சதவீதம் வாக்குகள் பதிவானது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தோ்தலில் மொத்தம் 5,505 வாக்காளர்களில், 1,765 ஆண் வாக்காளர்களும், 2,168 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 3,933 பேர் வாக்களித்ததால், மொத்தம் 71.44 சதவீதம் வாக்குகள் பதிவானது.


Next Story