மாற்றுத்திறனாளிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு; வங்கிக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


மாற்றுத்திறனாளிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு; வங்கிக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

மாற்றுத்திறனாளிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வங்கிக்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர்

வங்கி கணக்கு முடக்கம்

பெரம்பலூர் மாவட்டம், ெலப்பைக்குடிகாடு பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது(வயது 45). மாற்றுத்திறனாளியான இவர், அதே ஊரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2015-ம் ஆண்டு வியாபார கடனாக ரூ.30 ஆயிரம் பெற்றிருந்தார். 3 ஆண்டு காலக்கெடுவில் அந்த கடனுக்கு மாத தவணையை சரியாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சாகுல் ஹமீது சரியாக மாத தவணை செலுத்தவில்லை என்று அவரது வங்கி கணக்கை முடக்கம் செய்துள்ளனர்.

அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் மாத உதவித்தொகை ஆகியவை அவரது வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் வங்கி கணக்கை முடக்கி வைத்ததால் அவர் பாதிக்கப்பட்டார்.

இழப்பீடு

இது குறித்து சாகுல் ஹமீது, கடந்த 6.4.2017 அன்று பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

இதில், மனுதாரருக்கு வங்கி சேவை குறைபாட்டினால், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவு தொகைக்காக ரூ.5 ஆயிரமும், இன்றைய தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story