மாதந்தோறும் 15ம் தேதி பயனாளிகளுக்கு ரூ.1,000 வரவு வைக்கப்படும்: தமிழக அரசு தகவல்


மாதந்தோறும் 15ம் தேதி பயனாளிகளுக்கு ரூ.1,000 வரவு வைக்கப்படும்: தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 15 Sep 2023 7:36 AM GMT (Updated: 15 Sep 2023 7:44 AM GMT)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான இன்று அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின்கீழ் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அதேவேளை, நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.

வங்கிக்கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டதாக தங்களது செல்போன்களில் வந்த மெசேஜை பார்த்து மகிழ்ந்த பெண்கள், இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தகுதியான 1.06 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.1,000 செலுத்தப்பட்டு விட்டது என்றும், வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை பயன்படுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story