ஒரே நாளில் அடுத்தடுத்து 10 வீடுகளில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை


ஒரே நாளில் அடுத்தடுத்து 10 வீடுகளில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:46 PM GMT)

திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 10 வீடுகளில் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

விழுப்புரம்

திண்டிவனம்

நகை-பணம் கொள்ளை

திண்டிவனம் அருகே உள்ள ஏப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் புதிதாக கட்டி வரும் வீ்ட்டில் குடும்பத்துடன் படுத்து உறுங்கினார். பின்னர் மறுநாள் காலையில் பழைய வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5½ பவுன் நகை, ரூ.47 ஆயிரம் ரொக்கம், நிலப்பத்திரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

அதேபோல் பாதிரி கிராமத்தில் காளி என்பவரது வீட்டில் 5¼ பவுன் நகை, ஆறுமுகம் என்பவரது வீட்டில் 1½ பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 3 வீடுகளிலும் கொள்ளை போன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதேபோல் திண்டிவனம் காந்தி நகரை சேர்ந்த பாலமுருகன், பாதிரி கிராமத்தை சேர்ந்த பொன்னம்மாள், நீலகண்டன், சாமி கண்ணு, லட்சுமி நாராயணன், வெங்கடேசன், செல்வி உள்பட 7 பேரின் வீடுகளில் புகுந்து மர்ம நபா்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஆனால் இந்த வீடுகளில் கொள்ளை போன நகை-பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மேலும் கொள்ளை நடந்த வீடுகளின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 10 வீடுகளில் புகுந்து நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story