ரூ.4 கோடி விவகாரம்: தமிழக பா.ஜனதா பொருளாளரிடம் 2 மணி நேரம் விசாரணை
தாம்பரத்தில் ரெயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் பா.ஜனதா பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் பா.ஜனதா நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு கொண்டு செல்லப்பட்டது என புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த பணவிவகாரம் தொடர்பாக பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் வழங்கினர்.
அதில் சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் தான் கட்சி பணிக்காக டெல்லி செல்ல வேண்டி இருப்பதால் ஆஜராக முடியாது என்றும், வருகிற 30-ந் தேதிக்கு மேல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எப்போது வேண்டுமானாலும் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என்றும், அதற்கான தேதியை நீங்களே தெரிவிக்கலாம் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அவர் கூறி இருந்தார்.
இதற்கிடையே எஸ்.ஆர். சேகர் ஆஜராகாததால் அவரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி.சசிதரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை 9 மணி அளவில் கணபதி சக்தி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரெயிலில் சிக்கிய பணம் எங்கே இருந்து வந்தது. கட்சிக்கும், அந்த பணத்துக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எஸ்.ஆர்.சேகர் மிகவும் பொறுமையாக பதில் அளித்து உள்ளார். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நடந்தது.
பின்னர் எஸ்.ஆர்.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. சார்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் 30-ந் தேதி 10 நாட்கள் அவகாசம் தேவை என சி.பி.சி.ஐ.டி.க்கு கடிதம் கொடுக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஏற்றுகொண்டிருந்தனர். நான் டெல்லி செல்ல இருந்த நேரத்தில் திடீரென சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்தார்கள். நோட்டீஸ் கொடுக்காமல் விசாரிக்க வந்தனர். அவர்களை வரவேற்று அவர்கள் கேட்ட கேள்விக்கு சட்டபூர்வமாக பதில் அளித்தேன். சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்டனர். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக, பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காவல் துறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். அதற்கான உத்தரவு விரைவில் வந்துவிடும். அதற்குள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பா.ஜனதா கட்சி மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர். விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. மடியில் கனம் இல்லை. ஆனால் அரசின் நோக்கம் துன்புறுத்துதல், பரபரப்பை ஏற்படுத்துவதுதான். சட்டத்துக்கு புறம்பாக தகவல் தெரிவிக்காமல் விசாரிக்க வருகின்றனர். தமிழக அரசின் நோக்கம் பா.ஜனதாவை களங்கப்படுத்த வேண்டும் என்பதுதான்.
ரூ.4 கோடி பணத்துக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை சொல்லிவிட்டோம். உண்மையான தகவல்களை விசாரணை அதிகாரியிடம் சொல்லிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.