தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு


தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

கடலூர் அருகே பட்டப்பகலில் தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவு

கடலூர் அடுத்த திருமாணிக்குழி அருகே உள்ள டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் நாகராஜ் (வயது 41), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 8.45 மணியளவில் தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் உறவினர் இல்ல காதணி விழாவுக்கு சென்றார். பின்னர் விழா முடிந்ததும் மதியம் வீட்டுக்கு திரும்பி வந்து கதவை திறக்க முயன்றார். ஆனால் அவரால் திறக்க முடியவில்லை. வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனால் நாகராஜ், வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்த போது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 6½ பவுன் நகை மற்றும் ரூ.39 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ரூ.3 லட்சம் திருட்டு

அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ், வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் அருகிலேயே வைத்துவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு பின்பக்கம் வழியாக தப்பிச்சென்றது தெரியவந்தது. திருடுபோன நகை-பணத்தின்மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் தொழிலாளி வீட்டில் மர்மநபர்கள் நகை-பணத்தை திருடிச்சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story