விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை


விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

சின்னசேலம் அருகே விவசாயி வீ்ட்டில் புகுந்து ரூ.3 லட்சம் நகையை கொள்ளையடித்துசென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

விவசாயி

சின்னசேலம் அருகே உள்ள கருந்தலாக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் பூமாலை மகன் கணேஷ்குமார்(வயது 45). கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இவரது மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் கணேஷ்குமார், அவரது தாய் சின்னம்மாள்(65) என்பவருடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு கணேஷ்குமார் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தார். தரைத்தளத்தில் தூங்கிக்கொண்டிருந்த சின்னம்மாள் அதேபகுதியில் தனது உறவினர் இறந்த செய்தியை அறிந்து வீட்டின் கதவுகளை திறந்து போட்டபடி அங்கு சென்று விட்டார்.

நகை கொள்ளை

அப்போது வீ்ட்டில் புகுந்த மர்ம நபர் பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார்.

இந்த நிலையில் வீ்ட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த கணேஷ்குமார் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீ்ட்டின் அறையில் இருந்த பீரோவின் கதவுகள் திறந்து கிடந்ததையும் அதில் இருந்த துணி, மணிகள் கலைந்து கிடந்ததையும் பாா்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீஸ் வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இது குறித்து சின்னம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்துசென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story