ரூ.20 கோடி நில மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு


ரூ.20 கோடி நில மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு
x

ரூ.20 கோடி நில மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு தாம்பரம் போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

சென்னை பனையூர் ஜெ.நகரைச் சேர்ந்தவர் சுஜித்குமார். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் நானும், கொல்கத்தாவைச் சேர்ந்த ராஜீவ் பர்மா, சஞ்சீவ் பர்மா உள்ளிட்ட 4 பேரும் 8 கிரவுண்டு இடத்தை 1981-ம் ஆண்டு வாங்கினோம்.

இந்தநிலையில் அந்த இடத்தின் வில்லங்கச்சான்றை பார்த்தபோது, அந்த இடத்தை காஞ்சீபுரத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சட்ட விரோதமாக, போலி ஆவணங்கள் மூலம் தனது மகன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

ரூ.10 கோடி வரை கடன்

இந்த இடத்தின் பத்திரத்தை கொண்டு வெவ்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ.10 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருந்தபோதிலும் முறையாக விசாரணை நடத்தவில்லை. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பத்திரப்பதிவு அலுவலர்கள், வங்கி பணியாளர்களை வழக்கில் சேர்க்கவில்லை.

எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் மணிவாசகம், 'மனுதாரர்களின் ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்ததுடன் வங்கிகளையும் ஏமாற்றி உள்ளனர். சார்-பதிவாளர் உதவியுடன் ஆவணங்களை திருத்தி இந்த மோசடி நடந்துள்ளது. அதிகாரிகளின் உதவி இல்லாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை. அப்படியிருக்கும் போது இந்த மோசடிக்கு உடந்தையான அதிகாரிகளை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும். ஆனால், போலீசார் அவ்வாறு செயல்படவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.சிஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் உள்ளிட்டோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story