விருதுநகரில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


விருதுநகரில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

விருதுநகர் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

விருதுநகர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், செங்குன்றாபுரம் கிராமம், மூளிப்பட்டி விலக்கு அருகில் கடந்த 05.11.2023 அன்று மாலை மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், முருகனேரி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், விவசாயப் பணிகளை முடித்துவிட்டு திரும்பும்போது செங்குன்றாபுரம் கிராமம்-மூளிப்பட்டி சாலையின் அருகில் அமர்ந்திருந்தபோது அழகாபுரியிலிருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக தடம்மாறி பெண் தொழிலாளர்கள் மீது மோதிய விபத்தில் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், ஆறுமுகனேரி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிம்மாள் (வயது 55) க/பெ. சோனைமுத்து மற்றும் முத்துச்செல்வி (வயது 42) க/பெ.பவுன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், ஆறுமுகனேரி கிராமத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story