போலீஸ்காரர் மனைவியிடம் 27 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பிய கும்பல்


போலீஸ்காரர் மனைவியிடம் 27 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பிய கும்பல்
x

மதுரையில் போலீஸ்காரர் மனைவியிடம் 27 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பியவர்களில், ஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார்.

மதுரை

மதுரை,

மதுரையில் போலீஸ்காரர் மனைவியிடம் 27 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பியவர்களில், ஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார்.

தாலி சங்கிலி பறிப்பு

மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனி பகுதியில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம், நகரில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முத்து (வயது 30). சம்பவத்தன்று இரவு அவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

அவர்கள் திடீரென்று முத்து அணிந்திருந்த 27 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். பின்னர் வேகமாக தப்பி சென்றபோது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு வாகனம் மோதியது. அதில் அவர்கள் 3 பேரும் தவறி கீழே விழுந்தனர். உடனே அங்கு இருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றபோது வாலிபர் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 2 பேரும் 27 பவுன் தாலி சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

விசாரணை

இதுகுறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிடிபட்ட வாலிபரை அந்த பகுதிகள் மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது அவரிடம் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆகாஷ் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் வந்த மற்ற 2 பேர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, அவர்களை தேடிவருகிறார்கள்.


Next Story