வக்கீல் உள்பட 4 பேரிடம் வழிப்பறி


வக்கீல் உள்பட 4 பேரிடம் வழிப்பறி
x

மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் ஒரே நாளில் வக்கீல் உள்பட 4 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

மேட்டூர்:-

மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் ஒரே நாளில் வக்கீல் உள்பட 4 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழிப்பறி

மேட்டூரை அடுத்த நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 38). புரோட்டா மாஸ்டரான இவர், வேலையை முடித்துக் கொண்டு புதுசாம்பள்ளி குருவாகாடு பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ரவியை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். அவரிடம் பணம் இல்லாததால் செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் தப்பி சென்றனர்.

இதேபோல் சென்னையை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணதாசன் (54) என்பவர் மேட்டூர் ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கண்ணதாசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், டிரைவிங் லைசென்சு, ஏ.டி.எம். கார்டு, பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

வக்கீல்

இதேபோல் மேட்டூர் தொழிற்பேட்டையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த செல்லக்கிளி (25) என்பவரிடமும், மேட்டூரை சேர்ந்த வக்கீல் தீபக்குமார் என்பவரிடமும் மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 4 இடங்களில் வழிப்பறி நடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 4 பேரும் தனித்தனியாக கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இதற்கிடையே கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த சூர்யா (26), குழந்தைவேல் (22), தினேஷ் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story