இருதரப்பினர் மயானத்துக்கு செல்லும் பாதை சீரமைத்து தரப்படும்; கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு


இருதரப்பினர் மயானத்துக்கு செல்லும் பாதை சீரமைத்து தரப்படும்; கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 17 Feb 2023 6:45 PM GMT (Updated: 17 Feb 2023 6:46 PM GMT)

மணக்கரை பஞ்சாயத்தில் இருதரப்பினர் மயானத்துக்கு செல்லும் பாதை சீரமைத்து தரப்படும் என ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

மணக்கரை பஞ்சாயத்தில் இருதரப்பினர் மயானத்துக்கு செல்லும் பாதை சீரமைத்து தரப்படும் என ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எதிர்ப்பு

வல்லநாடு அருகே உள்ள மணக்கரை கீழுர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறந்தவர் உடலை கொண்டு செல்வதற்கு சரியான பாதை இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இறந்தவர் உடலை வயல்வெளி வழியாக கொண்டு செல்லும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், மணக்கரை கீழூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் ஊர் வழியாக கொண்டு செல்லும் போது அவர்கள் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வயல்வெளியில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ் குமார் மயானத்திற்கு செல்லும் பாதைகளை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமாதான கூட்டம்

இந்நிலையில், மணக்கரை கீழுர் கிராமத்தில் இறந்தவர் சடலத்தை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வயல்வெளி வழியாக கொண்டு சென்றதால் இறந்தவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் கவுரவ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் நாணயம், தாசில்தார் ராதாகிருஷ்ணன், சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ், தூத்துக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தில்லைபாண்டி, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், "மயானத்திற்கு செல்லும் பாதையில் பஞ்சாயத்து சார்பில் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த சாலையை தனி நபர்கள் உரிமைப் போர முடியாது. அனைவருக்கும் பொதுவான சாலையில் இறந்தோர் உடலை கொண்டு செல்ல தடை விதிக்ககூடாது. சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் நிலை நிறுத்த வேண்டும்" என்றார்.

அடிப்படை வசதி

கூட்டத்தில், மணக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மணக்கரை கீழூர் மற்றும் நடுவக்குறிச்சி கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக மேம்படுத்தி தரப்படும். இருதரப்பினர் மயானத்திற்கு செல்லும் செல்லும் சாலைகள் சீரமைத்து தரப்படும். மற்றொரு தரப்பினர் வசிக்கும் குடியிருப்பு பகுதி வழியாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாக இறந்தவர் உடலை கொண்டு செல்லக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து, மணக்கரை கீழூர் கிராமத்திற்கு சென்ற கலெக்டர் செந்தில்ராஜ், அப்பகுதியில் மயானத்திற்கு செல்லும் பாதையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சமாதான கூட்டத்தில், மணக்கரை கீழூர் மற்றும் நடுவக்குறிச்சி பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story