மதுக்கடையை மூடக் கோரி பெண்கள் சாலை மறியல், முற்றுகை
கள்ளக்குறிச்சி அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும் மதுபிரியர்களால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதோடு, சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை மது பிரியர்கள் கிண்டல் செய்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டது.
எனவே இந்த மதுக்கடையை அகற்றக்கோரி கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று வரதப்பனூர், அண்ணாநகர், புக்கிரவாரி ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கள்ளக்குறிச்சி- ஈரியூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடையை திறக்கக் கூடாது என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
முற்றுகை
அப்போது அங்கிருந்த பெண்கள் அனைவரும் திடீரென எழுந்து மதுக்கடையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று பெண்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலைமறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.