பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் குவியும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் குவியும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


பொள்ளாச்சி பகுதிகளில் ஆழியாற்றில் கொட்டப்படும் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


மாசுபடும் ஆழியாறு


மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.


மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆழியாறில் தொடங்கி மணக்கடவு வரை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அம்பராம்பாளையத்தில் திதி கொடுக்கபவர்கள், குளிக்க வரும் நபர்கள் துணிகளை ஆற்றில் போடுகின்றனர். மேலும் ஆற்றின் கரையோரத்தில் கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசுபடுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-


நடவடிக்கை தேவை


ஆழியாறு அணையில் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆறு ஆழியாறில் இருந்து மணக்கடவு வரை 42 கிலோ மீட்டர் நீளமுடையது. ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வழங்கப்படுகிறது. மணக்கடவு என்கிற இடத்தில் கேரளாவிற்கு தண்ணீர் பிரித்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆனைமலை, அம்பராம்பாளையம் உள்பட ஆழியாறு செல்லும் பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. சில நேரங்களில் ஆற்றில் தண்ணீர் எடுக்க போடப்பட்டு உள்ள குழாய்களை துணிகள் அடைத்துக் கொள்கின்றன. கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குபதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஆழியாறு பாதுகாக்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


பொதுமக்களின் கடமையாகும்


இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியாற்றின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பாசன வசதியும் பெறுகின்றன. எனவே ஆற்றை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். ஆனால் கழிவுகளை ஆற்றில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதுகுறித்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.



Next Story