வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 5:00 AM IST (Updated: 31 Aug 2023 5:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிய தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், 10 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.

பின்னர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பணியை புறக்கணித்து வெளியே வந்தனர். அதையடுத்து அந்தந்த அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம், 10 தாலுகா அலுவலகங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பாபு, துணை தலைவர் விஜயராகவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பணிகள் பாதிப்பு

பழனி தாலுகா அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. தாலுகா அலுவலகத்துக்கு வந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து, அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாவட்ட இணை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மங்களபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மண்டல துணை தாசில்தார் அண்ணாமலை தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் ராமதாஸ், தவமணி, வட்ட வழங்கல் அலுவலர் டேனியல் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தாசில்தாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதற்கிடையே மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story