திருச்சியிலும் அறிவுசார் நூலகம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு


திருச்சியிலும் அறிவுசார் நூலகம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
x

திருச்சியிலும் அறிவுசார் நூலகம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

திருச்சி

நூலாசிரியர்களுக்கு விருது

திருச்சி மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டு, சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட 5 நூல்களின் ஆசிரியர்களான கவிஞர் நந்தலாலா, தமிழினியன், திருக்குறள் முருகானந்தம், அருணாஹரிதை, திருக்குறள் தாமரை ஆகியோருக்கு விருது மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், 'மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். டெல்டா மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திலும் அறிவுசார் நூலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் வைக்க உள்ளேன். அதுபோன்ற நூலகம் அமைக்கப்பட்டால் மிகப்பெரிய பெருமையை பெற்றுள்ள திருச்சி மாவட்டத்தின் மகுடத்தில் வைரக்கல் பதித்ததுபோல் அமையும்' என்றார்.

மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

மேலும், நூலகத்தின் 2-வது தளத்தில் திருச்சி ரவுண்ட் டேபிள் அமைப்பினரின் நன்கொடையால் ரூ.5 லட்சம் மதிப்பில் படிக்கும் கூடம் கட்டப்பட்டதற்காக அவர்கள் கவுரவிக்கப்பட்டனர். உலக புத்தக தினவிழாவில் புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் வாசகம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கு கேடயங்களையும், தேசிய வருவாய் வழி திறனறி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், மண்டல தலைவர் மதிவாணன், வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story