மாவட்ட தலைமை மருத்துவமனையிலேயே ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க கோரிக்கை


மாவட்ட தலைமை மருத்துவமனையிலேயே ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க கோரிக்கை
x

108 ஆம்புலன்ஸ் நோயாளிகளுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையிலேயே ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடந்தது. ரவிச்சந்திரன் உறுதிமொழியை வாசித்தார். கூட்டத்தில் தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தி உள்ள ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 108 ஆம்புலன்சில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு அமல்படுத்த ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 17 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்சுகள் உள்ளன. இதில் தொடர்ந்து இரவு நேரங்களில் இயக்கப்படாமல் உள்ள வேப்பூர், காரை, கைகளத்தூர், செட்டிகுளம் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்சுகளை முழுநேரமும் இயக்கி, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை ஆற்றிட நிர்வாகம் நடவடிக்கை எடுக்ககோரி, அந்தந்த பகுதிகளில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபடுவது. 108 ஆம்புலன்சுகள் சிறப்பாக இயங்குவதற்கு மிக முக்கியமான வாகன பராமரிப்பிற்கு செலவினங்களை உடனடியாக நிதி வழங்க வேண்டும். 108 ஆம்புலன்சில் நோயாளிகளுக்கு அவசர தேவைக்கான ஆக்சிஜன் அளிக்கும் சிலிண்டர்களை திருச்சியில் வழங்காமல், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலேயே வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆள்பற்றாக்குறையை காரணம் காட்டி தொடர்ந்து இரவு நேரங்களில் இயங்காமல் உள்ள 108 ஆம்புலன்சுகளை இயக்குவதற்கு வெளிமாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் பணியமர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், மாவட்ட செயலாளர் செல்வகுமார், பொருளாளர் வெங்கடேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story