திருமயம் சமத்துவபுரத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை


திருமயம் சமத்துவபுரத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
x

திருமயம் சமத்துவபுரத்தில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு செல்ல கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

மின்சார அலுவலகம்

திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அம்மன்பட்டி, அரசம்பட்டி, ஊனையூர், மலைகுடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் பெரும்பாலாேனார் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள். திருமயம் மற்றும் 15 பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளுக்கான மின் கட்டணத்தை திருமயம் சமத்துவபுரத்தில் உள்ள மின்சார அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் இப்பகுதிக்கு செல்ல போதிய பஸ்வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் சென்று மின்கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் சிரமம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமயம் பஸ் நிலையம் அருகே அரசு கட்டிடத்தில் மின்சார அலுவலகம் இயங்கி வந்தது. இதனால் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் எளிதாக மின்கட்டணம் செலுத்தி வந்தனர். இந்தநிலையில் திருமயத்தில் இருந்து சுமார் 3½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சமத்துவபுரத்திற்கு மின்சார அலுவலகம் மாற்றப்பட்டது. ஆனால் அப்பகுதிக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி மின்சார அலுவலகத்திற்கு செல்ல கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

நடந்து செல்லும் அவலம்

திருமயம் கோட்டை பகுதியை சேர்ந்த கோமதி:- மின் கட்டணம் செலுத்த ஆண்களை விட பெண்களே அதிகமாக செல்கின்றனர். மின்கட்டணம் செலுத்த காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் திருமயத்தில் இருந்து சமத்துவபுரத்திற்கு ஒருசில பெண்கள் இருசக்கர வாகனங்களில் சென்று மின்கட்டணத்தை செலுத்துகிறார்கள். மற்றவர்கள் சுமார் 3½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சமத்துவபுரத்திற்கு ஆட்டோ அல்லது கால்நடையாக நடந்து சென்று மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய அவலம் உள்ளது. திருமயத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்சார அலுவலகத்தை மீண்டும் திருமயம் பஸ்நிலையம் அருகே அமைக்க வேண்டும். இல்லையெனில் சமத்துவபுரத்திற்கு செல்ல போதிய பஸ் போக்குவரத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

மின்தடை

திருமயம் பகுதியை சேர்ந்த நாகராஜன்:- வீட்டில் மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டாலோ அதனை பதிவு செய்வதற்கு சமத்துவபுரத்திற்கு செல்ல வேண்டிய அவலம் உள்ளது. இதனால் வயதானவர்கள் ஆட்டோ மூலம் மின்சார அலுவலகத்திற்கு சென்றோ அல்லது மற்றவர்களிடம் கூறி பதிவு செய்ய வேண்டி உள்ளது. மேலும் மின்கட்டணம் செலுத்த அருகே உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களில் கூடுதலாக ரூ.20 செலுத்தி மின்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக கூடுதல் பஸ்களை இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை

திருமயம் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ஹாரிஸ்:- மின் கட்டணம் செலுத்தும் இடம் திருமயம் நகருக்குள் இருக்கும் வரை பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது 3½ கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் பொதுமக்களுக்கு சென்று வர சிரமமாக உள்ளது. மேலும் வயதானவர்களும், பெண்களும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்தை திருமயம் நகருக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் சமத்துவபுரத்திற்கு செல்ல கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story