கரையான்குறிச்சியில் சாலை, கழிப்பிடம், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை


கரையான்குறிச்சியில் சாலை, கழிப்பிடம், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை
x

கரையான்குறிச்சியில் சாலை, கழிப்பிடம், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

25 ஆண்டுகளுக்கு முன்பு...

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரையான்குறிச்சி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. பின்னர் இதுவரை புதிதாக சாலை அமைக்கப்படவில்லை. வடிகால் வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. மேலும் பொது கழிப்பிட வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடிநீர் வினியோகத்திற்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பயன்பாட்டில் உள்ளது. ஆனால் தற்போது அந்த தொட்டி மற்றும் அதன் தூண்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால் அந்த தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதோடு, பழைய நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரையான்குறிச்சியை சேர்ந்த சரவணன்:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் அந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். அதன் அருகில் விளையாடியும் வருகின்றனர். சேதமடைந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம். விபரீதம் ஏற்படுவதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடிகால் வசதி இல்லை

அய்யாசாமி:- வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தெருக்கள் முழுவதும் நீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. முழங்கால் வரையிலும் பல நாட்கள் நீர் தேங்கி கிடக்கும் நிலையும் உள்ளது. இதனால் கொசுத்தொல்லையும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் கோவில்கள், வயலுக்கு செல்லும் பிரிவு பாதை உள்ளது. எனவே உடனடியாக அந்த தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

சாக்கடை நீர் போல் தண்ணீர்

விவசாயி மனோகரன்:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஆரம்ப காலத்தில் நல்ல குடிநீர் கிடைத்தது. ஆனால் தற்போது கடந்த சில வருடங்களாக தொட்டியின் உள்புறமும் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் சாக்கடை நீர் போல் கருப்பு நிறத்தில் தண்ணீர் வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே தெளிந்த நீர் கிடைக்கிறது. தினமும் இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி குழாயில் துணியை கட்டித்தான் தண்ணீர் பிடித்து வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் கிடைக்க உடனடியாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும். மேலும் எங்கள் கிராம பகுதியில் சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

பொதுக்கழிப்பிடம் வேண்டும்

தொழிலாளி பாலமுருகன்:- எங்கள் கிராமத்தில் இதுவரை பொதுக்கழிப்பிட வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பொதுக் கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என்று ஊராட்சியில் முறையிட்டால் நிதி இல்லை என்று கூறுகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story