சவடுமண் அள்ள அனுமதி வழங்க கோரிக்கை


சவடுமண் அள்ள அனுமதி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 27 Aug 2023 6:45 PM GMT (Updated: 27 Aug 2023 6:46 PM GMT)

சவடுமண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது திருவாடானை தாலுகாவாகும். இங்கு நெற்பயிற் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். தமிழக அரசு விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை சமப்படுத்துவதற்கு விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிய அனுமதியை பெற்று பொதுப்பணித்துறை மற்றும் யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து சவடுமண் எடுத்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சவடு மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கியுள்ளது. இந்த தாலுகாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் சவடு மண் எடுப்பதற்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக அனுமதிக்காக காத்திருக்கின்றனர். அனுமதி கிடைக்காததால் ஏராளமான விவசாயிகள் விவசாய நிலங்களை சமப்படுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளை இந்த மாதத்தில் தொடங்க உள்ளனர். அதன்பிறகு சவடுமண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தாலும் அது விவசாயிகளுக்கு பயனளிக்காது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story