எஸ்.புதூருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை


எஸ்.புதூருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 9:45 AM GMT)

எஸ்.புதூருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சிவகங்கை

எஸ்.புதூர் ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் மேலும் பல தனியார் பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்ற ஆசிரியர், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என பெரும்பாலானோர் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு பஸ்களில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழுதிபட்டியில் இறங்கி மோட்டார் சைக்கிள் அல்லது குழுவாக இணைந்து வாடகை வண்டிகளில் பயணித்து அந்தந்த இடங்களை சென்றடைகின்றனர். இதனால் பணிக்கு காலதாமதம், மன உளைச்சல், உடல் நலம் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றது. மேலும் சிலர் வேறு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர்.

இதனால் காலை 7.45 மணிக்கு மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்திலிருந்து புழுதிபட்டிக்கும், எஸ்.புதூர், உலகம்பட்டி வழியாக பொன்னமராவதிக்கும், இதேபோல் மாலை 4 மணிக்கு பொன்னமராவதியிலிருந்து உலகம்பட்டி, எஸ்.புதூர், புழுதிபட்டி வழியாக மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்திற்கும் அரசு பஸ் இயக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story