மானாமதுரை பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை


மானாமதுரை பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 9:46 AM GMT)

மானாமதுரை பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

மானாமதுரை பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை நகர் வேகமாக வளர்ந்து வரும் நகராக உருவாகி வருகிறது. இங்கு புகழ் பெற்ற கோவில்களிலும், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளும் உள்ளது. இதுதவிர மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் மானாமதுரையை கடந்து செல்ல வேண்டிய நகராகவும் இருந்து வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் மானாமதுரையை கடந்து செல்கிறது. இதுதவிர மானாமதுரையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மானாமதுரைக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகுதியில் பஸ் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாதது வேதனையளிக்கும் செயலாக உள்ளது.

அடிப்படை வசதிகள்

பஸ்நிலையத்தில் தினந்தோறும் மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், தொண்டி, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட முக்கியமான நகர்களுக்கும், ஏராளமான கிராமங்களுக்கும் தினந்தோறும் அரசு பஸ்கள், டவுண் பஸ்கள், விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு வந்து காத்திருந்து பஸ்களை பிடித்து தங்களது சொந்த பகுதிக்கு செல்கின்றனர். இந்நிலையில் பஸ்நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு போதுமான இருக்கைகளோ, ஓய்வு எடுப்பதற்கான அறைகளோ, சுத்தமான கழிப்பிட வசதியோ இல்லை. மேலும் போதிய இருக்கைகள் இல்லாததால் பயணிகள் மழை, வெயில் என எந்த காலக்கட்டமானாலும் பஸ்நிலையத்தின் வெளிப்புற பகுதியில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி செய்துகொடுக்கப்படவில்லை. இதுதவிர இங்குள்ள இலவச கழிப்பறை தூய்மை பணியாளர்கள் மூலம் அவ்வப்போது சுத்தம் செய்யப்படாததால் இங்கு வரும் பயணிகள் உள்ளே சென்று வர முடியாத நிலையில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கட்டண கழிப்பிடத்தில் பயணிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் பஸ்நிலையத்திற்கு வரும் பயணிகளின் கலைப்பை போக்கும் வகையில் அமைக்கப்பட்ட மின்விசிறிகள் எவ்வித பயனும் இல்லாமல் இயங்காத நிலையில் உள்ளது. பஸ்நிலையத்தின் உள்புறத்தில் சில கடை வியாரிபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அங்கு பயணிகள் நிற்க கூட இடமில்லாத நிலை உள்ளது. மேலும் இங்கு வரும் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பஸ்நிலையத்தில் அமருவதற்கு போதுமான இருக்கைவசதியில்லாததால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பஸ்கள் வரும் வரை கால் கடுக்க நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுதவிர சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் இங்கு வந்து போதிய துப்புரவு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டுவதால் தூய்மை இல்லாத இடமாக இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு நேரடியாக வந்து பயணிகளுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story