6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்-தமிழ்நாடு ஆசிரியர் கழகம் கோரிக்கை


6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும்-தமிழ்நாடு ஆசிரியர் கழகம் கோரிக்கை
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:45 PM GMT)

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் தமிழக பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

மேல்நிலை வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற்று வருகிறது. மேலும் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏப்ரல் 23-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்ரல் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பார்கள். அப்போது 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முறையாக தேர்வுகளை யாரை வைத்து நடத்துவது.

இதற்கு மாற்றாக 10-ம் வகுப்பிற்கு தேர்வுகள் இல்லாத பள்ளி வேலை நாட்களான ஏப்ரல் 7, 11, 12, 14, 18, 19 மற்றும் 21-ந்தேதி ஆகிய நாட்களில் தேர்வுகள் நடத்தி ஏப்ரல் 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஏனைய பள்ளி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.


Next Story