நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கோரிக்கை


நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:45 PM GMT)

நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைேகடுகளை தடுக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை,

நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைேகடுகளை தடுக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறினார்.

மாவட்ட பேரவை கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் சிவகங்கையில் நடந்தது. மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாநில துணை தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மோகன், பொருளாளர் விஸ்வநாதன், துணை தலைவர்கள் ஜெயராமன், அழகர்சாமி, துணை செயலாளர்கள் ஆறுமுகம், அண்ணாதுரை, மற்றும் ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது:- அரசு தற்பொழுது கொண்டு வந்த மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. எனவே முதல்-அமைச்சர் நேரடியாக இதில் தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பெண்களுக்கு மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தகுதி படைத்தவர் யார் என்பதை பின்னர் அறிவிப்போம் என்று கூறியுள்ளனர். அந்த அறிவிப்பு வந்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய முடியும். அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது

நீண்ட நாள் கோரிக்கை

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். தற்போது அந்த பணி மிக தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தேவையான கூடுதல் நிதியை மத்திய அரசும், மாநில அரசும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு தேவையான உரம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது கிடையாது. வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நம் தேவைக்கு ஏற்ப உரம் கிடைப்பது இல்லை. எனவே விவசாயத்திற்கு தேவையான உரத்தை இந்தியாவில் தயாரிக்க வேண்டும். அதுவரை விவசாய காலத்திற்கு முன்பே கூடுதல் உரத்தை இறக்குமதி செய்து கிட்டங்கிகளில் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் என்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசும் இதுபோன்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story