கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்


கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Jan 2023 6:45 PM GMT (Updated: 6 Jan 2023 6:47 PM GMT)

கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என விசுவ இந்து பரிசத் மாநில நிறுவன தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என விசுவ இந்து பரிசத் மாநில நிறுவன தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

காவி உடைக்கு தடை

விசுவ இந்து பரிசத் மாநில நிறுவன தலைவர் வேதாந்தம் ஜி ராமேசுவரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சமீபத்தில் நடைபெற்ற கிராம கோவிலுக்கான நலத்திட்டம் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் கிராம கோவில் பூசாரிகள் காவி உடை அணிந்து வர அதிகாரிகள் தடை செய்தது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது.

தி.மு.க. அரசு கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதாக கூறியும் இதுவரை வழங்கவில்லை. எனவே, கோவில் பூசாரிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

உண்ணா விரத போராட்டம்

வருகிற 29-ந் தேதி ராமேசுவரத்தில் கிராம கோவில் பூசாரிகள் மாநில பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தெய்வ நம்பிக்கை இல்லாத அதிகாரிகளை நியமித்து ஆகம விதிகளை மீறி செயல்பட்டு பக்தர்களை மன வேதனைக்கு உள்ளாக்குகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பேட்டியின் போது விசுவ இந்து பரிசத் மாநில துணை பொதுச் செயலாளர் ராமசுப்பு உடன் இருந்தார்.


Next Story