ஊத்துக்கோட்டை அருகே தீண்டாமை சுவர் அகற்றம்


ஊத்துக்கோட்டை அருகே தீண்டாமை சுவர் அகற்றம்
x

திருவள்ளூர் மாவட்டம் வாழவந்தான் கோட்டையில் இருளர் சமுதாய குடியிருப்பை சுற்றி கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் வந்து செல்லும் பொது வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்து தீண்டாமை சுவர் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சுவரை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், உடனே தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் கடந்த 12-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் தாசில்தார் அருண்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஓரிரு நாட்களில் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த நிலையில் நேற்று பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம், ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் வயலட் ஆகியோரின் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 200 மீட்டர் நீளம், 5 அடி உயரம் கொண்ட சுவர் இடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதி மலைவாழ் மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story