ஆக்கிரமித்து கட்டிய 86 வீடுகள் அகற்றம்


ஆக்கிரமித்து கட்டிய 86 வீடுகள் அகற்றம்
x

ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 86 வீடுகளை கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் அகற்றினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 86 வீடுகளை கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் அகற்றினர்.

ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதி சத்யா நகரில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 98 வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நீர்நிலை புறம்போக்கு பகுதி என்பதால் இவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் இந்த பகுதியில் அடிப்படை வசதி, போக்குவரத்து வசதி இல்லை என்று கூறி அங்கு செல்ல மறுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அல்லிக்கண்மாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. அப்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.

வீடுகள் இடித்து அகற்றம்

அப்போது சிலர் வீடுகளை காலி செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அதிகாரிகள் வரும் 15-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும், இனி அவகாசம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி சென்றனர். ஆனாலும் பலர் அந்த இடத்தில் இருந்து காலி செய்யவில்லை.

இதையடுத்து நேற்று ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் தலைமையில் தாசில்தார் முருகேசன், பொதுப்பணித்துறை பொறியாளர் ஜெயதுரை உள்ளிட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் எந்திரம் கொண்டு மீண்டும் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை 86 வீடுகள், கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கினர். எஞ்சியுள்ள வீடுகள் இன்று இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story