பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் விடுவிப்பு
விபத்தில் பலியான புதுமாப்பிள்ளை குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதையடுத்து பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் விடுவிக்கப்பட்டது.
விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, அறங்கூரை சேர்ந்த கலியமூர்த்தியின் மகன் பாஸ்கர் (வயது 29). ஓட்டல் மாஸ்டரான இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் பாஸ்கரும், அந்த பெண்ணும் அதே ஆண்டு மே மாதம் 22-ந்தேதி காலை நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், ஆவட்டி கூட்டு ரோடு அருகே ஐவதுகுடி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிய புது மாப்பிள்ளை பாஸ்கர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புதுப்பெண் படுகாயமடைந்தார்.
ஜப்தி செய்ய உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பாக பாஸ்கரின் தாயார் வள்ளியம்மை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ரூ.18 லட்சத்து 86 ஆயிரம் நஷ்டஈடாக பாஸ்கர் குடும்பத்தினருக்கு வழங்க திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாஸ்கர் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காமல் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் தற்போது வட்டியுடன் ரூ.28 லட்சத்து 10 ஆயிரத்து 731-ஐ நஷ்டஈடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த நஷ்டஈடு தொகையையும் அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஏதேனும் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மாலையில் பஸ் விடுவிப்பு
அதன்படி நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி செல்ல இருந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கியதாகவும், மீதமுள்ள பணத்தை வழங்குவதற்கு கால அவகாசம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஐப்தி செய்யப்பட்ட அந்த அரசு பஸ் மாலையில் விடுவிக்கப்பட்டது.