66 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 முதன்மைத்தேர்வு முடிவு வெளியீடு


66 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 முதன்மைத்தேர்வு முடிவு வெளியீடு
x

66 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-1 முதன்மைத்தேர்வு முடிவு நேற்று வெளியாகியுள்ளது. இதில் 137 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்பட குரூப்-1 பிரிவில் காலியாக இருக்கும் 66 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் இதற்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் முதல்நிலைத்தேர்வு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவு அதே ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி வெளியானது. அதில் தேர்வானவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அதன்படி, முதன்மைத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6-ந் தேதிகளில் நடந்தது. சென்னையில் மட்டும் 37 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத 3 ஆயிரத்து 800 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

137 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு

இந்த நிலையில், முதன்மைத்தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது. தேர்வில் தேர்ச்சிபெற்ற 137 பேரின் பட்டியலுடன் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அனைவருக்கும் அடுத்ததாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.

நேர்முகத்தேர்வு சென்னை பாரிமுனை பஸ் நிலையம் அருகில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக வளாகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்கிறது. நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வரும் தேர்வர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும் என்றும், இதுதொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய ஆவணங்கள்...

நேர்முகத்தேர்வுக்கு முதன்மை எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களுக்கான முன்பதிவு விதியின் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் சரிபார்க்கும்போது தவறுகள் இருந்தால், அவர்களின் தற்காலிக சேர்க்கை ரத்து செய்யப்படுவதுடன், அடுத்தகட்ட தேர்வுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்றும், குறிப்பாக அத்தியாவசிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கத் தவறினால்கூட, அவர்கள் வாய்மொழித்தேர்வில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.


Next Story