இறந்த முதியவரின் உடலை கொண்டு செல்ல முடியாததால் உறவினர்கள் மறியல்


வீட்டின் நான்கு புறமும் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு உள்ளதால் இறந்த முதியவரின் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

காவலாளி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 75). இவர் ஆலங்குடி அரசு பள்ளியில் இரவு காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் சுந்தரம் வீட்டின் நான்குபுறமும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன.

இதனால் சுந்தரம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியே செல்ல தடுப்பு சுவரை தாண்டி சென்று வந்தனர். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில் கடந்த 3 மாதகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சுந்தரம் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் துக்கம் விசாரிப்பதற்காக சென்றனர். அப்போது வீட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் பெண்கள், சிறுமிகள் தடுப்பு சுவரை தாண்டி சென்றனர். மேலும் உடலை வைக்க ப்ரீசர் பாக்ஸ் தடுப்பு சுவர் வழியாக கொண்டு செல்லப்பட்டது.இதற்கிடையே சுந்தரம் உடலை கொண்டு செல்ல பாதை வசதி இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க ஆலங்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உஷா நந்தினி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதியவரின் உடல் நேற்று இரவு வரை அடக்கம் செய்யப்படாமல் வீட்டிலேயே வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story