கட்டணம் செலுத்தாததால் குடிநீரின் அளவு குறைப்பு: குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

கட்டணம் செலுத்தவில்லை என்பதை காரணம் காட்டி குடிநீரின் அளவை குறைப்பதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


கட்டணம் செலுத்தவில்லை என்பதை காரணம் காட்டி குடிநீரின் அளவை குறைப்பதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


முற்றுகை


பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குறைத்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங:கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


அப்போது பொதுமக்கள் கூறியதாவது:- கொரோனாவிற்கு பிறகு இந்த ஆண்டு தான் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மற்ற வரிகளை நிறுத்தி வைத்து உள்ளனர்.


தொழில் வரி வசூல் செய்து குடிநீர் கட்டணத்தை செலுத்துகிறோம். தற்போது 85 சதவீதம் வரை குடிநீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. எனவே கட்டணம் செலுத்தவில்லை என்பதை காரணம் காட்டி குடிநீரின் அளவை குறைக்க கூடாது என்றனர்.


நடவடிக்கை எடுக்கப்படும்


அதற்கு அதிகாரிகள் தரப்பில், கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் 20 சதவீதம் தான் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. 80 சதவீதம் வரை குறைக்கவில்லை. இதுகுறித்து உதவி பொறியாளர்களை அனுப்பி ஆய்வு செய்யப்படும். குடிநீர் முழுமையாக வழங்குவது குறித்து மேலாண்மை இயக்குனரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணனிடம் மனு கொடுத்துவிட்டுஅங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story