''தினமும் செய்தித்தாள்கள் படித்தால் வாசிப்பு திறன் அதிகரிக்கும்''-பயிற்சி பட்டறையில் தகவல்


தினமும் செய்தித்தாள்கள் படித்தால் வாசிப்பு திறன் அதிகரிக்கும்-பயிற்சி பட்டறையில் தகவல்
x

‘‘தினமும் செய்தித்தாள்கள் படித்தால் வாசிப்பு திறன் அதிகரிக்கும்’’ என பயிற்சி பட்டறையில் தெரிவிக்கப்பட்டது

மதுரை


மதுரையில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் புக் கில்டு ஆப் மதுரை அமைப்பு சார்பில், 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி பட்டறை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சியில் புக் கில்டு அப் மதுரை நிறுவனர் நிக்கோலஸ் பிரான்சிஸ் தலைமை தாங்கி, பேசியதாவது:-

குழந்தைகளுக்கு வாசிப்பு திறமை அதிகரிக்க அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை தினசரி வாசிக்க வைக்க வேண்டும். மேலும் அவர்களுடன் பெற்றோர்களும் அருகில் அமர்ந்து ஒன்றாக உரக்க வாசிக்க வேண்டும். வாசிப்பு சமயத்தில் செல்போன்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். செல்போன் பயன்படுத்தினால் குழந்தைகள் நாம் என்ன செய்கிறோம் என்பதை தான் பார்ப்பார்கள். அதனால் செல்போன்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதுபோல் தினமும் செய்தித்தாள்களை கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும். அதிலுள்ள பட காட்சிகள், சிறிய துணுக்குகள், வாழ்வியல் கட்டுரைகள், பயண கட்டுரைகள், இயற்கை காட்சிகள், துப்பறியும் நாவல்கள், சுற்றுலா இடங்கள் ஆகியவை குழந்தைகளின் வாசிப்பு திறன், ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். குழந்தைகளுக்கு பிடித்த பல தகவல்கள் செய்தித்தாள்களில் இடம்பெற்றிருக்கும். அவர்கள் எந்த தகவல்களை உற்று கவனிக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனித்து அவர்களுக்கு அதன் மீதான ஆர்வத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.இதில் கல்வியாளர் தரணி கேசவன், உதவி பேராசிரியர் அந்தீயா ஐசாக், தமிழ் பயிற்றுனர் ஜெயவல்லி, அரசு பள்ளி ஆசிரியர் ராணி குணசீலி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு பயிற்சி வழங்கினர்.


Related Tags :
Next Story