கூட்டணி வேறு, கொள்கை வேறு- கே.எஸ்.அழகிரி


கூட்டணி வேறு, கொள்கை வேறு- கே.எஸ்.அழகிரி
x

கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி நினைவுதினம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவுதினத்தையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, செயல்தலைவர் டாக்டர் செல்லக்குமார், பொதுச்செயலாளர்கள் தமிழ்செல்வன், காண்டீபன், மகிளா காங்கிரஸ் தலைவர் வக்கீல் ஆர்.சுதா, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்.டி.ஐ. பிரிவு துணைத்தலைவர் மயிலை தரணி உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தகுதி இல்லை

ராஜீவ்காந்தி பற்றி பேச சீமானுக்கு தகுதி கிடையாது. பேரறிவாளன் விடுதலையை நிச்சயமாக எங்களால் ஏற்கவே முடியாது. கொலை குற்றம் சுமத்தப்பட்ட நபர் சட்டத்தின் சந்துபொந்து வழியாக தப்புவது கூடாது. இந்த வழக்கை தவறான பார்வையில் சுப்ரீம் கோர்ட்டு பார்த்துள்ளது.

கூட்டணி வேறு, கொள்கை வேறு

பேரறிவாளனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவி வரவேற்று வாழ்த்தியிருக்கிறார். எங்களை தனிப்பட்ட முறையில் தி.மு.க. பேசியிருந்தால் நாங்கள் இதுகுறித்து பதில் சொல்லியிருப்போம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. மதசார்பின்மை என்ற ஒரே இலக்கில் நாங்கள் ஒருங்கிணைந்திருக்கிறோம். பேரறிவாளனை, மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்தால் என்ன?

ஒரு மிகப்பெரிய நல்ல நோக்கத்துக்காக தி.மு.க. வுடன் கூட்டணி வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தனிப்பட்ட முடிவு எடுக்கமுடியாது. கட்சி தலைமை எடுக்கும் முடிவே நிலையானது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story