மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா


மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா
x

தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1,038-வது சதய விழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. அன்று 1,038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தஞ்சாவூர்

1038-வது சதய விழா

தஞ்சை பெரியகோவிலில் நடைபெற உள்ள மாமன்னன் சதய விழா குறித்து விழாக்குழு தலைவர் து.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டியநாள் அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதயநாளன்று சதயவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1,038-வது சதயவிழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது.

அதனைத்தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் கலெக்டர் தீபக்ஜேக்கப், மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் தெய்வநாயகம் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

பரதநாட்டிய கலைஞர்கள்

பின்னர், மாலையில் திருமுறை பண்ணிசை, நாதசங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1,038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம், 8.15 மணிக்கு சிவதாண்டவம், 8.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சதய விழா நாளான 25-ந்தேதி (புதன்கிழமை) காலை 7.20 மணிக்கு மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறைத்திருவீதி உலா, காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகல் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ராஜராஜன் விருது

மாலை 6 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில் தெட்சிணாமூர்த்தி, டாக்டர் செல்வராஜ், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் பழனியப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, இரவு 8 மணிக்கு சுகிசிவம் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், சதய விழாக்குழுத்துணைத்தலைவர் மேத்தா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story