ரெயில்வே பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை


ரெயில்வே பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை
x

ரோந்து பணியின்போது ரெயில்வே பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கரூர்

பெண் போலீசுக்கு மிரட்டல்

தஞ்சாவூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் லதா (வயது 45). இவர் கடந்த 2023-ம் ஆண்டு மே 6-ந் தேதி காரைக்கால்- எர்ணாகுளம் விரைவு ரெயிலில் தஞ்சாவூரில் இருந்து கரூர் வரை ரோந்து அலுவலராக பணி புரிந்தார். அப்போது கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சாத்தமங்கலத்தை சேர்ந்த தேவகிருஷ்ணன் (43) திருப்பூர் ஜவுளி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்காக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டை வைத்துக் கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் குடிபோதையில் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து அவரிடம் லதா விசாரணை செய்துள்ளார். அப்போது அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், பணி செய்யவிடாமல் தடுத்தும், ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு விடுவேன் எனக்கூறியும் மிரட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கரூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் லதா புகார் அளித்தார். அதன் பேரில் தேவகிருஷ்ணன் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவுசெய்து கைது செய்தனர்.

2 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை கரூர் கூடுதல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பை கூடுதல் மகிளா விரைவு நீதிமன்ற நடுவர் சுஜாதா வழங்கினார்.

இந்த தீர்ப்பில், தகாத வார்த்தைகளால் திட்டியதற்கு ரூ.1,000 அபராதம், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்கு ஓராண்டு சிறைத்தண்டனை, ரெயிலில் அநாகாிகமாக நடந்து கொண்டதற்கு 6 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.250 அபராதம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் என ஐந்தரை ஆண்டு கால சிறைத்தண்டனையை விதித்து அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.


Next Story