இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும்


இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும்
x

குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பணியை செய்து முடிப்பதற்கான செலவு விவரங்களை, ஒருவர் ஓர் அமைப்புக்கு தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணமே ஒப்பந்தப்புள்ளியாகும்.

பெரம்பலூர்

ஒப்பந்தப்புள்ளி பெட்டி

பொதுவாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத் துறை, வீட்டு வசதித் துறை, குடிசை மாற்றுவாரியம், விவசாய பொறியியல் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புதிய கட்டுமானப்பணிகள், பழுதுபார்ப்பு உள்ளிட்ட வேலைகளை செய்வதற்கு அந்தந்த துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.

இதில் கலந்துகொண்டு பணிகளை செய்ய விரும்பும் ஒப்பந்ததாரர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளில் பணிகளை நிறைவேற்றி தருவதற்கான தொகையை குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வார்கள்.

ஆணைக்கடிதம்

குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒப்பந்தப்புள்ளி பெட்டியை அதிகாரிகள் திறந்து, அதில் குறைந்த தொகை பதிவு செய்துள்ள தரமான ஒப்பந்ததாரரை தேர்வு செய்து அவருக்கு பணிகளை நிறைவேற்றி தருவதற்கான ஆணைக்கடிதம் வழங்குவார்கள். இதனை பெற்ற ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வேலையை முடித்துத் தருவார்கள்.

ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் விண்ணப்பங்களை போடமுடியாமல் சில இடங்களில் ஒப்பந்ததாரர்களிடையே வாக்குவாதமும், சண்டை சச்சரவுகளும் நடப்பது வழக்கம். இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது.

ஒப்பந்தப்புள்ளிக்கு ஆன்-லைன் முறை

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்து, அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிக்கும் ஆன்லைன் முறையை கடந்த 1-ந் தேதியில் இருந்து கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதற்கு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் இனி http://tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:-

முறைகேடு நடக்க வாய்ப்பில்லை

பெரம்பலூர் சுந்தர் நகரை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் செந்தில்குமார்:- தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறையில் ரூ.25 லட்சத்திற்கு மேல் டெண்டர் கோரும் பணிகளுக்காக இ-டெண்டர் முறையில்தான் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையின் கீழ் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் மட்டுமே ஒப்பந்தம் கோரமுடியும். இ-டெண்டர் ஒப்பந்தப்புள்ளி முறை என்பது ஒளிவுமறைவு இல்லாதது. முறைகேடு நடக்க வாய்ப்பில்லாதது. ஒப்பந்ததாரர் இணையதளம் வாயிலாக தான் இருக்கும் இடத்தில் இருந்து தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை அலைச்சல் இல்லாமல் டெண்டர் படிவத்தை பதிவேற்றம் செய்திட முடியும். இ-டெண்டர் முறை வரவேற்கத்தக்கது.

நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான தரக்கட்டுப்பாட்டை முறைப்படுத்த ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு மையம் என உள்ளது. ஒப்பந்த பணியை மேற்கொள்வதில் அனைத்து தகுதிகளும் உள்ளவர் என இம்மையத்தின் அதிகாரி சான்றிதழ் அளித்தால் தான் ஒரு ஒப்பந்ததாரர் இ-டெண்டரை கோரமுடியும். மேலும் இ-டெண்டரில் ஒப்பந்தம் தருவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் புதிய சாலை அமைப்பதற்கான பொருட்களின் கலவை குறித்து முன்மாதிரியான டிசைன் மிக்ஸ் பெற பணம் செலுத்த வேண்டும். பணி ஒப்பந்தம் அளிக்கும்போது, பணி மேற்கொள்வதற்கு உரிய டிசைன் மிக்ஸ், நெடுஞ்சாலை துறையில் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்ததாரரே பணம் செலுத்த வேண்டும். அதற்கான கட்டணம் திருப்பி அரசால் வழங்கப்படுவதில்லை. டிசைன் மிக்ஸ் பணிக்கு ஒப்பந்ததாரர் தனது ஒப்பந்த வேலையில் கிடைக்கும் லாபத்தில் டிசைன் மிக்ஸ் மாதிரி பெறுவதற்கான கட்டணம் பிடித்துக்கொள்ளப்படுவதால், ஒப்பந்ததாரர்களுக்கு பெருமளவு பண இழப்பு ஏற்படுகிறது. டிசைன் மிக்ஸ் கட்டணத்தை, ஒப்பந்தம் பெற்றுள்ள ஒப்பந்ததாரருக்கு திருப்பி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பிருந்த ஒப்பந்தப்புள்ளி கோரும் முறையை விட இ-டெண்டர் கோரும் முறையே எக்காலத்திலும் சிறந்ததாகும்.

விதிமுறை மீறல்கள் சாத்தியமில்லை

பெரம்பலூர் கம்பன் நகர் 2-வது தெருவில் வசிக்கும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் கண்ணன்:- கடந்த 25 ஆண்டுகளாக ஒப்பந்த பணிகளை செய்து வருகிறேன். சிறுவாச்சூர், சமயபுரம், திருச்சி, திருவானைக்காவல் போன்ற புண்ணிய தலங்களில் கோவில் கட்டிடங்கள், சேவார்த்திகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளேன். தற்போதுவரை பணிக்கான டெண்டர்கள் கோரப்பட்டு, குறிப்பிட்ட காலம், தேதி, நேரத்திற்குள் ஒப்பந்தப்புள்ளிகளை அதற்குரிய பெட்டிகளில் சேர்ப்பது பொதுப்பணித்துறையில் நடைமுறையில் உள்ளது. ஒப்பந்தப்புள்ளி தொகைக்கு ஏற்ப முதல்நிலை (கிளாஸ்-1), 2-ம்நிலை, 3-ம்நிலை என பணி ஒப்பந்தத்தின் மதிப்பீட்டுக்கு தகுந்தார்போல் பிரித்து வைத்துள்ளனர்.

ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பத்தை பெறுதல், அதனை பிழையின்றி பூர்த்தி செய்தல், உரிய சான்றிதழ்களை பெற்று இணைத்தல், டேவணித்தொகை செலுத்துதல், முன்வைப்பு தொகைக்கு வங்கியில் இருந்து வரைவோலை பெற்று இணைத்தல் என ஒப்பந்தப்புள்ளிகளை கவரில் இருந்து பிரிக்கும் வரை ரேஸ் போன்று ஒருவித ஓட்டமாக இருந்து கொண்டே இருக்கும். மேனுவலாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்போது, போட்டிகள் அதிகம் இருப்பதையும், போட்டியாளர்கள் யார் என்பதையும் ஒப்பந்ததாரர்கள் தெரிந்து கொள்ளமுடியும். ஆனால் இ-டெண்டர் முறையில் எந்த ஒப்பந்ததாரரும், எப்பகுதியில் இருந்தும் ஒப்பந்தப்புள்ளியை இணையவழியில் பதிவேற்றம் செய்திட முடியும். இ-டெண்டர் முறை எளிதானது. விதிமுறை மீறல்கள் சாத்தியமில்லை. மேலும் ஒப்பந்தப்புள்ளியை யாருக்கு வழங்குவது என்பதை முடிவெடுப்பதில் யாருடைய குறுக்கீடும் இருக்காது. ஆகவே எல்லாவிதத்திலும் எளிய வழியான, ஒளிவு மறையில்லாத இ-டெண்டர் முறையை வரவேற்கிறேன். இ-டெண்டர் நடைமுறைக்கு வரும்போதுதான் அதில் உள்ள சிறப்புகள் தெரியவரும்.

தவறுகள் நடக்க வாய்ப்பு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் எஸ்.குணமணி:- ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளில் விண்ணப்பத்தை முறையாகப் பெற்று தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் பணிகளை ஒதுக்கி தருவதுடன், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்று கோரி பலமுறை சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். காலம் தாழ்த்தி இப்போதுதான் அரசு ஒப்பந்தப்புள்ளியை ஆன்லைனில் மட்டுமே கோர முடியும் என்று அறிவித்து உள்ளது. ஆனால் இந்த முறையிலும் பல முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருப்பதால், இதனை முறையாக நடத்தி அனைவரின் ஆதரவையும் அதிகாரிகள் பெறவேண்டும். குறிப்பாக வங்கி டிமாண்டு டிராப்ட் (டி.டி.) நேரில்தான் வழங்க வேண்டும் என்கின்றனர். இதனாலும் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. பணிகளுக்கு குறைந்த கட்டணத்தை பதிவு செய்துவிட்டு, அதிகளவில் கமிஷனும் வழங்க வேண்டியிருப்பதால் தரமான கட்டுமானங்களை எதிர்பார்க்க முடியாது. எனவே இந்தத் திட்டம் பெயரளவில்தான் இருக்கும் என்றுதான் தெரிகிறது.

ஒப்பந்தப்புள்ளி அனுமதிக்குழு

பொதுப்பணித்துறை அதிகாரிகள்:- பொதுவாக பணிகளை பொறுத்தவரையில் ரூ.1 கோடி வரை ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு கண்காணிப்பு பொறியாளருக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு முதன்மை பொறியாளரிடம் உள்ளது. அதற்கு மேல் உள்ள தொகைக்கு ஒப்பதல் அளிப்பதற்கு என்று 'ஒப்பந்தப்புள்ளி அனுமதிக்குழு' என்ற ஒரு குழு உள்ளது. அதில் 3 முதன்மை பொறியாளர்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இடம் பெற்றிருப்பார். இவர்கள் ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி அளிப்பார்கள். ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி கோருபவர்கள் தகுதி இல்லை என்றால் உடனடியாக தகுதி நீக்கம் செய்துவிட முடியும். அதேபோல் போலியான ஆவணங்கள் பதிவேற்றம் செய்தாலும் உடனடியாக தெரிந்துவிடும். தற்போது ஒப்பந்தப்புள்ளி என்றாலே 2 பேர் மட்டுமே போடுகின்றனர். அதில் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி என்றால் போட்டியும் அதிகமாக இருக்கும். இந்த அறிவிப்பால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒப்பந்தபுள்ளி பெட்டிகளுக்கு ஓய்வு

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் பணிகளை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் தங்கள் படிவங்களை சமர்ப்பிப்பதற்காக அலுவலகங்களில் மரத்தால் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்படும். அதில் ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை போடுவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் பெட்டி திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் தற்போது அரசு ஆன்லைனில் தான் ஒப்பந்தப்புள்ளிகள் கோரமுடியும் என்று அறிவித்ததால் அரசு அலுவலகங்களில் உள்ள ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளுக்கு ஓய்வு தரப்பட்டு உள்ளது. ஒரு சில அலுவலகங்களில் பழைய கோப்புகள் வைப்பதற்கு இந்தப் பெட்டிக்களை பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


Next Story