அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சங்கராபுரம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மல்லாபுரம். இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தெரு விளக்கு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படவில்லை.
இது குறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று அங்குள்ள சங்கராபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம்.
நடவடிக்கை
இதை தவிர்க்க எங்களுக்கு தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை விரைந்து செய்து கொடு்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதனை கேட்ட போலீசார், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.