கீரணி கண்மாயை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்


கீரணி கண்மாயை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
x

கீரணி கண்மாயை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

கீரணி கண்மாய்

அரிமளம் ஒன்றியம் துறையூர் ஊராட்சி கீரணிப்பட்டி கிராமத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் கீரணி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் தனி நபர் 15 ஏக்கர் பரப்பளவில் பட்டா பெற்று இருப்பதாகவும் அந்த பட்டா இடத்தை அளக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் வந்தனர். அப்போது கிராம மக்கள் கீரணி கண்மாயில் தனிநபர் ஆக்கிரமித்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பட்டா பெற்று இருப்பதாகவும், அந்த பட்டாவை ரத்து செய்யக் கோரியும், ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாசன கண்மாயில் ஆக்கிரமித்து பட்டா பெற்று இருந்தால் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முற்றுகை

இந்தநிலையில் பிரச்சினைக்குரிய கண்மாயை அளக்க கடந்த நவம்பர் 31-ந் தேதி கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி மற்றும் நிலஅளவையர் ஆகியோர் கண்மாய்க்கு வந்தனர். இதைப்பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கண்மாய்க்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 350 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாயை நம்பி 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். ஆனால் இந்த கண்மாய் பகுதியில் தனிநபர் எவ்வாறு பட்டா பெற்றார் என தெரியவில்லை.

தற்போது கண்மாயில் தண்ணீர் உள்ள நிலையில் நீங்கள் எவ்வாறு முறையாக அளக்க முடியும்? நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் பட்டாவை ரத்து செய்து கண்மாய் நீர் விவசாயிகளுக்கு பயன்படும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் மனு கொடுத்தோம். ஆனால் நீங்கள் தற்போது அளக்க வந்துள்ளது ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதாக கருதுகிறோம். எனவே நீங்கள் கண்மாயை அளக்கக்கூடாது. திரும்பி செல்லுங்கள் என கூறி வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதனைதொடர்ந்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பிரச்சினைக்குரிய கண்மாயை அளக்காமல் திரும்பி சென்று விட்டனர்.

மறியல் போராட்டம்

இதற்கிடையே பட்டா பெற்ற சம்பந்தப்பட்ட தனிநபர் நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீரணி கண்மாயை அளப்பதற்காக நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மாயில் இறங்கி அளக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி, பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான், இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, மனோகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் கண்மாயை அளக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பட்டா ரத்து

இதையடுத்து ஆர்.டி.ஓ. முருகேசன் கூறுகையில், மேற்கண்ட இடம் நீர் பிடிப்பு பகுதியாக இருந்தால் கண்டிப்பாக பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்ற அப்பகுதி மக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை- கே.புதுப்பட்டி சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.


Next Story