கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா
x

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி பேரூராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட பாரதிநகர், அரசடிக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து, பேரூராட்சி துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், பூலாம்பாடி பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலரும், துணைத் தலைவருமான தி.மு.க.வை சேர்ந்த செல்வலட்சுமி தேர்தல் நேரத்தில் சாலை, குடிநீர், மின் விளக்கு, பால் பண்ணை உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக கூறிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக அவரை நாங்கள் சந்தித்தபோது, அவரும், அவருடைய கணவருமான சேகரும் தரக்குறைவாக பேசி, அவமதிப்பு செய்கிறார்கள்.

மேலும் அவர்கள் எங்களை சந்திக்க மறுக்கின்றனர். பணமோசடி, கட்டப்பஞ்சாயத்தும் செய்து வருகிறார்கள். இதனை நாங்கள் தட்டிக்கேட்டால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்று மிரட்டி வருகிறார்கள். எனவே பூலாம்பாடி பேரூராட்சி துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்து, அவர் மற்றும் அவருடைய கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் துணைத்தலைவரின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.4 லட்சம் வழங்கும் திட்டம்

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதியில் முறைகேடாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் உள்ள சங்கத்தின் மீதும், சங்க நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன் தலைமையில், அக்கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், முதல்-அமைச்சர் அறிவித்தபடி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம், அந்த வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களில், வீடு இல்லாத தொழிலாளி வீடு கட்டிக்கொள்ள ரூ.4 லட்சம் வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்திட வேண்டும். அவர்களுக்கு தொழிலாளர் நல வாரிய நிதியும் செலுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த மனுவை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டரை வலியுறுத்தியிருந்தார்.

தனியார் டயர் தொழிற்சாலை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன் தலைமையில், அக்கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் இயங்கும் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும் ஆலையில் கரும்புகை வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இவர் கடந்த வாரமும் இதே கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தங்கள் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான நூறு நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 12 நாட்கள் தான் ஊராட்சி நிர்வாகத்தால் வேலை தரப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு அந்த திட்டத்தில் உள்ள நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

299 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 299 மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.


Next Story