மீன் மார்க்கெட்டை பொதுமக்கள் முற்றுகை


மீன் மார்க்கெட்டை பொதுமக்கள் முற்றுகை
x

கள்ளக்குறிச்சி மீன் மார்க்கெட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மந்தைவெளி அருகில் உள்ள நடுத்தக்கா தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்குள்ள மீன் கடைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த மீன்மார்க்கெட் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மீன்மார்க்கெட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன்மார்க்கெட் மூடப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் நகரமன்ற தலைவர் சுப்ராயலு சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் இந்த மீன்மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story