சுருளி அருவியில் நீராடிய பொதுமக்கள்; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்


சுருளி அருவியில் நீராடிய பொதுமக்கள்; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
x

ஆடி அமாவாசையையொட்டி சுருளி அருவியில் பொதுமக்கள் புனித நீராடினர். மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்

தேனி

சுருளி அருவி

கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும் புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ராமேசுவரத்துக்கு அடுத்தபடியான புனித தலமாக சுருளி அருவி சிறப்பு பெற்றது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஆடி அமாவாசையையொட்டி இன்று சுருளி அருவியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் சென்று அருவியில் புனித நீராடினர். பின்னர் சுருளி ஆற்றங்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதையடுத்து அங்குள்ள சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், ஆதி அண்ணாமலையார் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

பக்தர்களின் வருகை அதிகரி்ப்பால் அவர்கள் சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். ஆடி அமாவாசையையொட்டி மாவட்டம் முழுவதிலும் இருந்து சுருளி அருவிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சுருளி அருவிக்கு வந்த பொதுமக்களிடம் வனத்துறையினர் கட்டணம் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு ஆற்றில் நீராடினர். பின்னர் சிவன் மற்றும் விநாயகருக்கு மோட்ச விளக்கு ஏற்றி வழிபட்டனர்.


Next Story