அனுமதியின்றி போராட்டம் - பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு


அனுமதியின்றி போராட்டம் - பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு
x

தி.மு.க. அரசை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 56 ஆக அதிகரித்துள்ளது . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு அனுமதியின்றி 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 3 பிரிவுகளிலும், கோவையில் 4 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story