சென்னையில் மாநில பதிவாளர் அலுவலகம் முன் மறியல் போராட்டம்; அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி


சென்னையில் மாநில பதிவாளர் அலுவலகம் முன் மறியல் போராட்டம்; அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 5 Jun 2023 7:27 PM GMT (Updated: 6 Jun 2023 6:20 AM GMT)

சென்னையில் மாநில பதிவாளர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கூறினார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் ஆகியவற்றின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகள் வருவாய்த்துறை நிர்வாகத்திலும், டி.என்.சி.எஸ்.சி. நிர்வாகத்திலும், கூட்டுறவுத்துறை நிர்வாகத்திலும் இணைந்து பார்க்கப்படுகிறது. அவ்வாறு பார்ப்பதால் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, ரேஷன் கடைகள் பொது வினியோகத் திட்டத்தினை ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம். தற்போது பொட்டலங்களாக வழங்காமல் மூட்டை மூட்டையாக பொருட்களை கொடுக்கிறார்கள். அதில் எடை குறைவாக கொடுக்கப்படுகிறது. அந்த காரணத்தினால் அந்த எடை குறைவை சரிகட்ட ரேஷன் கடை பணியாளர்கள் சில குறைபாடுகளை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். எனவே சரியான எடையில் பொட்டலங்களாக பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு அழைத்து பேசாமலும், அப்படி பேசியிருந்தால் அப்போது எடுக்கப்படக்கூடிய முடிவுகளை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. எனவே வருகிற 9-ந் தேதி மறியல் போராட்டமும், அதைத்தொடர்ந்து 14-ந் தேதி முதல் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எங்களது சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும். தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story