தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம்


தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம்
x
தினத்தந்தி 5 July 2023 7:08 PM GMT (Updated: 6 July 2023 12:22 PM GMT)

கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

ஊர்வலம்

வேலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று மாலை உழவர் தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவேரி தனபாலன் பங்கேற்றார். மாநில நிர்வாகிகள் உதயகுமார், அரிமூர்த்தி, ராமதாஸ், ரகுபதி மற்றும் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மணி வரவேற்று பேசினார்.

முன்னதாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று முத்துக்கடை பஸ் நிலையத்தை அடைந்தனர்.

தள்ளுபடி செய்ய வேண்டும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500, ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களை உரிய நேரத்தில் திறப்பதோடு முறைகேடுகளை களைய வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்டுள்ள பயிர் கடன் உள்பட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், 80 சதவீத மானியத்துடன் வேளாண் கருவிகள் வழங்க வேண்டும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பாலாற்றில் அரசு மணல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 22 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


Next Story