சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதிக்கு 'சீல்'
திருவண்ணாமலையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாவிற்கு புகார்கள் வந்தது.
அதைதொடர்ந்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விடுதியில் விபசாரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து தங்கும் விடுதியில் சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும், அங்கீகாரம் இன்றி விடுதி நடத்தி வந்ததாலும்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் திருவண்ணாமலை தாசில்தார் சரளா முன்னிலையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தங்கும் விடுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட அறைகளுக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.